கடிதம் 3: உணவு பற்றி காந்தியடிகள்…

இக்கடிதம் அக்டோபர் 4, 2015 அன்று எழுதியது. 




அன்புள்ள சீனியர் அவர்களுக்கு,
     சமிபத்தில் நான் படித்த உணவு என்ற புத்தகம் என்னளவில் சில சிந்தனைகளை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திவிட்டது. காந்தியடிகள் மேற்கொண்ட உணவு பரிசோதனைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் விதமாக ஹரிஜன், யங் இந்தியா ஆகிய பத்ரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். இதை படிக்கத் தொடங்கியவுடன் உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு வந்தது. நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு மேல் உங்களுடன் பழகியிருக்கிறேன் என்ற முறையில் கவனித்த விசயம் என்னவென்றால் காந்தி அவர்கள் சொல்லியிருக்கும் உணவு சீர்திருத்த முறைகளை வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று இன்றுதான் எனக்கு புரிகிறது.

  உணவு பற்றிய விவாதங்கள் நம்மிடையே இதுவரை அதிகம் ஏற்பட்டதில்லை மற்ற விசயங்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம் கோபம் வரும் அளவுக்கு கார சாரமான விவாதங்கள் நம்முள் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் நினைத்தது என்னவென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பதனால் பழமைகளை கடைபிடிக்க நினைத்து இவ்விசயங்களை (உணவு பத்தியம்) அதிகம் யோசித்து பார்க்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆனால் அது எவ்வளவு பெரிய அறியாமை என்று இன்றுதான் தெரிகிறது. ஒருவேளை நீங்கள் விவாதத்தை ஏற்படுத்தி தர்க்க ரீதியான காரணங்களை முன்வைத்திருந்தால் எனக்குள் உணவு சீர்திருத்தத்தை பற்றிய எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் வைராக்கியத்துடன் ஒரு செயலை நீண்ட நாட்கள் கடைபிடிப்பதில் எனக்கு பயிற்சிகள் இன்னும் சொல்லிக் கொல்லும் படியாக ஏற்படவில்லை என்பதையும் கூறவேண்டும். ஒருவேளை உணவு பழக்கங்களை எனக்கு புரியும் படி விளக்கி கூறியிருந்தாலும் அதை கடைபிடிக்க தயங்கியே இருப்பேன்.

   சரி நான் என்ன படித்தேன் என்பதை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். இவ்விசயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் உணவின் மீதான மதிப்பீடு மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்து கொள்ள உதவியாக இருக்கும்.

   காந்தி சொல்கிறார் கொஞ்சமாக சாப்பிட வேண்டும், அதை நிதானமாக பற்கலின் உதவி கொண்டு மென்று வாயில் ஊறும் எச்சில் நாம் மெல்லும் உணவுடன் நன்கு கலந்து வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும். முடிந்த வரையில் வெப்பத்தை பயன்படுத்தி சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் நேரடியாக, முழுமையாக உடலில் சென்று சேறும். இக்காரியங்கள் நமக்கு சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் உடல் ஜீரண மணடலத்திற்கு வேலையை குறைக்க வழி செய்யும். இதனால் சமயலுக்காகும் செலவும் குறைவே. ஆதலால் உடல் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட இவ்விசயங்கள் தீவிரமாக, வைராக்கியத்துடனும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்.

   இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர பல அறப்போராட்டங்களை முன்னொடுத்த காந்தி உணவு விசயத்தில் மேற்கொண்ட சோதனைகளை படிக்க படிக்க ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் அவருடைய ஆளுமையின் மீது என்னுடைய மதிப்பும் அதிகரிக்கிறது.


அன்புடன்
தா.அருள்...  

கடிதம் 2: இசாந்தீப் சிங்...


இக்கடிதம் அக்டோபர் 5, 2015 அன்று எழுதியது.    


     
     நண்பா எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உண்ணுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பஞ்சாப்பில் படித்து கொண்டிருந்த போது இது நடந்தது. என்னுடைய வகுப்பு தோழன் பஞ்சாப் மாநிலம் சங்ரூரை பூர்வீகமாக கொண்டவன். பெயர் இசாந்தீப் சிங். பண்ணை இயந்திரவியல் துறையில் படித்து வந்தான். அவன் இளநிலை முடித்து இரண்டு வருடங்கள் தழிழ் நாட்டில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்ததனால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்ன அண்ணா நல்லரிக்கிங்களா என தமிழில் கேட்பான். எனக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததோ அதாவது மொழி தெரியாமல் நான் படும் கஷ்டங்களை பார்த்து உணர்வுப்பூர்வமாக அவனும் இதே கஷ்டங்களை தமிழ் நாட்டில் இருந்தபோது சந்தித்திருந்ததினால் நான் அங்கு சென்றதிலிருந்தே என்னுடன் அன்பாக பழகி வந்தான்.

       என்னை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையை பற்றி அழுத்து கொள்வான் பெரும்பாலும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும். எப்பொழுது நிறந்தமான அரசாங்க வேலை கிடைக்குமோ? எப்பொழுது கல்யாணம் ஆக போகிறதோ? என்கிற புலம்பல்கள் சில நேரங்களில் அதிகமாக கூட இருக்கும். ஆனால் மிகவும் அன்பானவன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும்  நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமைந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சி எப்பொழுதும் கலகலப்பாக அவனிடம் இருக்கும்.

        நான் இரண்டாமாண்டு இறுதி செமஸ்டர் படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனக்குள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடும் போது எப்பொழுதும் போல வாழ்க்கை பற்றிய புலம்பல்கள்,  பிராஜக்ட் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என பேசிவிட்டு மறுநாள் விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமை நடக்கவிருந்த நண்பனின் திருமணத்திற்கு சென்றுவிட்டான். ஞாயிறு அன்று நடந்த கல்யான விருந்தில் மது அருந்திவிட்டு அவனுடைய நெருங்கிய நன்பனுடன் கார் ஓட்டிச் சென்றபோது, சாலையில் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டான். செய்தி எங்களுக்கு கிடைத்தது. நான் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். ரத்தமும் சதையுமாக முகம் சிதைவடைந்த அவனுடைய உடம்பை பார்த்த போது எனக்குள் ஒர் எண்ணம் தோன்றியது. நேற்றுவரை இந்த உடம்பு எவ்வளவு மனச்சிக்கல்களுடன் இருந்தது; இன்று எல்லாமே முடிந்துவிட்டது.  
    
        மனிதனுடைய வாழ்க்கை என்பது இவ்வளவு தானா. ஒரு அரைமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் செய்து முடித்து விட்டு பிரேதத்தை எரித்தனர். ஆனால் அன்று நான் நினைத்தேன் இன்னும் ஆறு மாதத்திற்குள் இவன் பெயரை எல்லோரும் மறந்து விடுவர். எவ்வளவோ வாய்புகள் நமக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய சுவடை கூட பதிக்காமல் இந்த மனிதன் இறந்து விட்டானே நமக்கும் ஒரு நாள் இப்படி முடிவு வந்து விட்டாள் என்ன செய்வது. ஆகையால் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் விதமாக இருக்க வேண்டும். நாம் இறந்துவிட்டாள் கூட நாம் செய்து விட்டு போகும் செயல்களினால் எப்பொழுதும் நம்மை நினைவு கூர்ந்து பார்க்கப்பட வேண்டும் என மனதிற்குள்ளே நீண்ட விவாதங்கள் இரண்டு நாள் நடந்தன. ஒரு வாரம் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதற்கு பிறகு தான் எனது நடவடிக்கைகளில் மாற்றம் வரத் தொடங்கின.

         நண்பா இதை ஏன் உனக்கு சொல்கிறேன் தெரியுமா தினமும் செய்தித்தாள்களில் மனிதர்கள் இறக்கும் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அதை படிக்கும் போதெல்லாம் எந்தவொரு சலனமும் ஏற்படாத மனது ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கும் போது மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்குள் ஒழிந்து கிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளிகொணர்ந்த பெருமை என் நண்பன் இசாந்தீப்பையே சாரும் என எப்பொழுதும் கருதுகிறேன்.  



அன்புடன்
தா.அருள்.

கடிதம் 1: உங்கள் கானொளி உரை கேட்டேன்; எனது கருத்தை எழுதியிருக்கிறேன்

இக்கடிதம் ஆகஸ்டு 10, 2015 அன்று எழுதியது. ஐ.ஐ.டி பேராசிரியருக்கு அவருடைய ஒரு கானொளி உரையை கேட்டுவிட்டு எழுதிய கடிதம்..




மதிப்பிற்குறிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

        என் பெயர் அருள் செல்வம். உணவு பதன்செய் பொறியியல் துறையில் முனைவர் பட்ட மாணவராக கோயமுத்தூர், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டிருக்கிறேன். தங்களுடைய வலைப்பக்கத்தை 2008-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன் நீங்கள், பத்ரி, அருள்செல்வன் கந்தசாமி சேர்ந்து நிர்வகித்த அறிவியல்.இன்போ வலைதளத்திலிருந்து தான் எனக்கு பரிட்சயம் ஆனிர்கள். இதற்கு முன்பும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் நினைவிருக்கலாம். அண்மையில் உங்களுடைய காணொளி உரையை பார்த்தேன்; கேட்டேன். சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

     முத்தமிழ் விழாவில் நீங்கள் பேசிய கருத்துகள் இவை // சிறுவயது முதலே ஆங்கிலவழி கல்வி முறையில் படித்ததினால் தமிழில் எழுத வேண்டுமென்ற என்னம் தற்செயலாக வந்தது என்று//

எனது வாழ்க்கை அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதனால் உங்களுடைய இந்த முயற்சி (தமிழில் அறிவியல் எழுதுவது) எவ்வளவு முக்கியமானது என்று தோன்றலாம்.

    நான் ஒரு ஏழைக்குடும்பத்து மாணவன் எனது அப்பா தஞ்சாவூர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கி சம்பாதிக்கும் கூலி தொழிலாளி ஆகவே எனது பள்ளி நாட்கள் அரசாங்க பள்ளிகளில் கழிந்தது. பனிரெண்டாம் வகுப்பில் தொழிற்கல்வி பாடமாக இருந்த வேளாண்மையை எடுத்து படித்தேன் அதற்கு காரணம் என் பொற்றோருக்கு எந்த குரூப் எடுத்து படிக்க வைத்தால் வாழ்கை நல்ல முறையில் அமைக்க முடியும் என்று தெரியாதவர்கள் என்பதால் ஏதோ படிக்க வைக்க வேண்டும் என்று தான் அப்பொழுது அவர்களுக்கு முக்கியமாக தோன்றியது. என்பொற்றோரை குறை சொல்ல விருப்பவில்லை அத்தனை கஷ்டத்திலும் என்னை படிக்க வைத்தனர். நான் வகுப்பில் சுமாரான மாணவன் புரிந்து படிக்க தெரியாது மணப்பாடம் பண்ணிதான் பரிட்சைகள் எழுதுவேன். +2 வில் நான் எடுத்த மதிப்பென்கள்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை வேளாண் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது 2002-ல். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது soil என்றால் மண் என்பது எனக்கு தெரியாது chili என்றால் மிளகாய் என்பது தெரியாது இந்த அளவுதான் என் அறிவு இருந்தது. கல்லூரியில் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பாடம் நடத்துவார்கள் ஆகையால் ஆரம்ப நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன  நான்காண்டுகள் பட்டபடிப்பில் நான் அரியர்கள் வைத்து பாஸ் ஆகி இளநிலை படிப்பை முடித்தேன்.

     இளநிலை முடித்தவுடன் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் பயோ டீசல் எடுக்கும் ஆராய்சியில் 2006-ல் பணியில் சேர்ந்தேன் அப்பொழுது நல்ல பேராசிரியர்களிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது அறியாமையை புரியவைத்தனர். ஆராய்சியின் மீது எனக்கு ஆசை வந்ததும் அப்பொழுதுதான். அன்று சம்பளம் எனக்கு மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் ஒரு வருடத்திற்கு மேல் என்னால் தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியவில்லை.

       2007ன் இறுதியில் ஒரு தனியார் சொட்டு நீர் பாசன கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு விவசாயிகளை பார்த்து எனது நிறுவன சொட்டுநீர் பாசன அமைப்பை விவசாய நிலங்களுக்கு அமைத்து தர வேண்டும் அதுதான் என் வேலை. தெரிந்தே நிறைய பொய்கள் சொல்ல வேண்டியிருந்தது இயற்கையில் நான் ஒரு ஏழை என்பதால் என்னைப் போன்ற ஏழை விவசாயிகளை பிழைப்பிற்காக ஏமாற்ற மனம் இடம் கொடுக்கவில்லை மேலும் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட பேராசிரியர்களின் நட்பு என்னை அறிவியலை நோக்கி வர வைத்தது 2008 அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோவையில் வேளாண் பல்கலையில் இளநிலை ஆராய்சியாளராக சேர்ந்தேன் அதற்கு முக்கிய காரணம் கேட் எக்சாம் எழுதி கரக்பூரில் இருக்கும் ஐஐடியில் எம்டெக் படிக்க வேண்டும் என்பதே.

        நான் 2006லிருந்தே இந்த எக்சாமை தொடர்ந்து எழுதி வந்தேன் ஆனால் வெற்றி பெற முடியவில்லை காரணம் பாடங்களை ஆழமாக புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமம் மேலும் அடிப்படை அறிவியல் தகவல்கள் சுத்தமாக எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

        இதற்கிடையில் தொடர்ந்து பரிட்சைகளில் பெயிலாகி வந்ததினால்
சுற்றியிருப்பவர்கள் நீ படிப்பதற்கே லாயக்கில்லை என ஏளனமாக பேச
ஆரம்பித்தனர் மிகவும் நொந்து போன நிலையில் தான் உங்களுடை அறிவியல் இன்போ தளம் கண்ணில் பட்டது அப்பொழுது எனக்கிருந்த ஒரே ஆறுதல் இதுமாதிரியான வலைதளங்கள் தான் கீற்று, தின்னை போன்ற வலைதளங்களில் இருந்த அறிவியல் கட்டுரைகளை தமிழில் படிக்க ஆரம்பித்தேன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டேன். மிர் பதிப்பக புத்தகங்கள் தமிழில் இருப்பது தெரிந்து படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது.

    2011-ல் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் பசாகி பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில் எம்டெக் உணவு பதப்படுத்தும் துறையில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. 2013-ல் படிப்பை முடித்தேன். எம்டெக் முடிக்கும் போது 5 ஆராய்சி கட்டுரைகள் எழுதி சமர்பித்திருந்தேன் 2 வெகுஜன அறிவியல் கட்டுரைகள் கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் பிரசுரமாகியிருந்தது.

      கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்க பழகினேன் அதுவே ஒரு நல்ல பழக்கமாகி இன்று நிறைய புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.

     ஐயா உங்கள் உரையில் உங்கள் மாணவர்களை நன்கு கவனித்து நெருக்கமாக பழகி இனம் கண்டு கொள்கிறீர்கள் என்று சொன்னீர்கள் ஒருவேலை ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவன பேராசிரியர்களும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான் உங்களைப் போன்று மனநிலையில் இருபார்களோ என்று என்னத் தோன்றுகிறது. எனது இத்தனை வருட கல்லூரி அனுபவத்தில் ஒரு ஆசிரியரைக்கூட மாணவர்களிடம் அன்பாக பழகி நான் பார்த்ததில்லை. மாச மாசம் எனக்கு சம்பளம் வருகிறது நீ படிச்சா என்ன படிக்கலாட்டி எனக்கென்ன வகைராக்கல் தான் ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்று கான்வெண்டிலும் வெளிநாடுகளிலும் படிக்க வைக்கின்றனர். ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றன. எங்கள் பல்கலைக்கு அரசாங்கத்தில் கோடிக்கணக்கில் ஆராய்சிக்கு நிதி ஒதுக்குகின்றனர் பலபேர் தங்கள் சுயலாபத்திற்காக ஊழல் செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஆசிரியர்கள் பரந்த வாசிப்பனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர் இது என் தனிப்பட்ட கருத்து. உங்களைபோன்றவர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நமக்கு இது போன்ற குருமார்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கமாகவும் இருக்கிறது.

     தமிழில் அறிவியலை எழுதலாமா? வேணாமா? என்ற யோசனையே ஏற்படக்கூடாது உங்களுக்கு. தமிழ்நாட்டில் என்போன்றோர் திறமை இருந்தும் படிப்பை என்னி பயந்து அடுத்தவர்களால் ஏளனப்படுத்தப்பட்டுகொண்டு ஏராளமானோர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தான் ஒரே ஆறுதல். நான் இலக்கிய எழுத்தாளர்களையும் கவனித்து வருவதால் பணம் அதிகம் கிடைக்காது என்ற பிரச்சினைகள் ராயல்டி கம்மியா குடுக்கறாங்க போன்ற விசயங்கள் உங்களுக்கு கிடையாது என்பதை நானாகவே நினைத்து கொள்கிறேன்.
சென்றவாரம் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் உங்களுடைய நானோ புத்தகம் வாங்கி வந்துள்ளேன் படித்துவிட்டு கண்டிப்பாக கடிதம் எழுதுவேன்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்பது எனது அளவுகடந்த ஆசை.




அன்புடன்
தா. அருள்.

நான் எழுதிய கடிதங்கள்...

     பொதுவாக அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் சில நல்ல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். வாழ்க்கையில் நான் பார்க்கும் விசயங்கள் சிலசமயம் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி அமைக்கப்படக்கூடிய வல்லமை படைத்தவை அப்படியான தருணங்களை என் நன்பர்களுடன் கடிதத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளேன். கடிதம் எழுதுவதில் உள்ள சவுகரியம் நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை நிதானமாக யோசித்து தகுந்த வார்த்தைகளைக் கொண்டு சொல்லிவிட முடியும். போசும் போது இது கடினம். சிலசமயம்  தப்பான வார்த்தைகள் பிரயோகம் ஆவதையும், சொல்லவந்த விசயம் மறந்து போவதையும் நம்மால் தடுக்கமுடியாது.

    நேற்று எனது மின்னஞ்சலை துளாவியபோது (மின்னஞ்சலும் கடிதம் தானே!) எப்போதோ எழுதிய சில மின்னஞ்சல்களை படிக்க நேர்ந்தது. ஒரளவிற்கு சுவாரசியம் என்னளவில் ஏற்படுத்திய அக்கடிதங்களை இங்கே தொடர் பதிவுகளாக பதிய ஆசைப்படுகிறேன். இதை ஏன் நான் செய்கிறேன் என்றால் சில நேரங்களில் மனதிலிருப்பதை வார்த்தைகளாக வடித்தவுடன் ஒரு ஆத்ம திருப்த்தி என்னுள் ஏற்படுவதை  நிறைய சந்தர்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி நான் உணர்ந்த தருனங்கள் தான் இக்கடிதங்கள். இன்று எதேச்சையாக இவைகளை பார்த்தவுடன் வாழ்கையின் நிதர்சணங்களுக்கும் ஒரு அழகு இருப்பதை பார்க்கமுடிகிறது. 

    ஒய்வு நேரங்களில், பொழுது போகாத சமயங்களில் இவை உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரசியத்தை கொடுக்கும் என நம்புகிறேன். 



அன்புடன்
தா.அருள்

அத்வைதம் கூறும் மூன்று அவஸ்தைகள்

  அத்வைத வேதாந்தம், மனித வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் ஆழமாகப் பார்க்கும் ஞானபாரம்பரியம். நாம் அனைவரும் தினமும் மூன்று நிலைகளில் (அவஸ...